நாள் : 29 மார்ச் 2024
ஏற்பாடு : தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர்
இடம் : அல் இஸ்லாஹ் சொசைட்டி முஹர்ரக்
சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம், பிறர் நலன் நாடல், பரஸ்பர புரிந்துணர்வு, மனித நேயம் குறைந்து சக மனிதனையே வேட்டையாடி மகிழ்ந்திடும் காலச்சூழலில்...
இவைகளை தடுக்கவேண்டிய ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகள், தங்களது அரசியல் ஆதாயத்திற்காக, எண்ணெய்யிட்டு வெருப்புத் தீ மூட்டும் தேசச் சூழலில் சமூக நல்லிணக்கத்தை, சகோதரத்துவத்தை, பரஸ்பர புரிந்துணர்வை சமூகத்தில் விதைக்க வேண்டிய பொறுப்பு, சிவில் சமூகத்தை சார்ந்த நம் ஒவ்வொருவரையும் சாரும் என்பதை உணர்ந்தவர்களாக
இஸ்லாத்தை குறித்த தவறான கற்பிதங்களை களைந்து, சரியான பிம்பத்தை, உள்ளதை உள்ளபடியே கொண்டுசேர்க்கும் முகமாக
சமூக நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சியை தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் (TIC) முன்னெடுத்தது, திரளாக சகோதர சமயத்தவர்கள் அவர்தம் குடும்பத்தினர் என 300-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியை சகோதரர் அன்வர்தீன் வழிநடத்தினார்.
சகோதரர் அப்துல் அஹது இறைவசனங்களை ஓதி துவக்கிவைத்தார்
சிறப்புரையாற்றிய தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டரின் பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரவூஃப்
"ஒன்றே குலம் நாம் என்போம்
ஒருதாய் மக்கள் நாமென்போம்"
என்ற சகோதரத்துவம் போற்றும் வரிகளை நினைவூகூர்ந்தவர்...
நெல்லுக்(கு) இறைத்தநீர் வாய்க்கால் வழியோடிப்
புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம் - தொல்லுலகில்
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்(டு)
எல்லார்க்கும் பெய்யும் மழை
என்ற மூதுரை வரிகளை மேற்கோள்காட்டினார்.
இன்னும், இறைவன் நம்மை கண்காணித்துக் கொண்டிருக்கிறான் என்கிற உணர்வை நோன்பு உண்டாக்கிவிடுகிறது,
அத்தகைய உணர்வு இன்றைய ஆட்சியாளர்களிடம் துரதிஷ்டவசமாக இல்லை என்றார்.
பின்னர், சகோதரர் அலாவுத்தீன் நன்றியுரை கூற...
விருந்தினர்களுக்கு சகோதரர் அமீர் அலி அன்புப் பரிசாக அன்பளிப்புகளை வழங்கி உபசரித்தார்.
செவிக்கு உணவான சொற்பொழிவு நிறைவுற்றபின் இஃப்தார் உணவு பரிமாறப்பட்டது.
விருந்தினர்களை இன்முகத்துடனும், முகமலர்ச்சியுடனும் வரவேற்று மகிழ்ந்ததும்
கனிவான உபசரிப்புடன் கூடிய விருந்தோம்பலும்
அரபு பதங்களை தவிர்த்து, சகோதர சமயத்தவர்களின் நெஞ்சைத்தொடும் தமிழ் மூதுரை கருத்துக்கள் வழி செவிக்கு உணவூட்டிய விதமும்
விருந்தினர்களை வெகுவாக கவர்ந்திருந்தது
இதுபோன்ற நிகழ்வுகளை தொடர்ச்சியாக செய்துவாருங்கள் என Feedback வழியே அவர்கள் வேண்டியதும்
நேர்மறையான Feedback தந்து வருகையாளர்கள் பலர் பதிவிட்டதும் நிகழ்ச்சியின் நோக்கம் சரியான திசையில் பயணித்ததை உறுதிபடுத்தியது.
அல்ஹம்துலில்லாஹ்!!!
நிகழ்ச்சிக்காக உழைத்த TIC தன்னார்வலர்களுக்கும் இன்னும் திட்டமிட்டு செயல்படுத்திய பொறுப்பாளர்களுக்கும் இறைவன் நன்மைகளை வாரிவழங்குவானாக,
ஆமீன்
தகவல்
நிஜார் முஹம்மது
ஊடகப்பிரிவு - தாருல் ஈமான்
தமிழ் இஸ்லாமிக் சென்டர் - பஹ்ரைன்
Commentaires